பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பணமதிப்பு நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நிர்மலா சீதாராமன் பணமதிப்பு நீக்கம் என்பது நல்ல நோக்கத்தோடும், நன்கு சிந்தித்தும் எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. 2016 நவம்பர் 8ஆம் தேதி திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்து ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் 50 நாட்களில் நிலைமை சீராகிவிடும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். இருப்பினும், நிலைமை சரியாக மேலும் பல காலம் ஆனது. புழக்கத்தில் இருந்த சுமார் 85% நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. அப்போது பொதுமக்கள் தங்கள் கைகளில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் மாற்ற பெரும் துன்பத்தை எதிர்கொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. வங்கிகள், ஏடிஎம்களில் பொதுமக்கள் அவசரநிலை காலம் போல நீண்ட வரிசைகளில் நின்றனர். அப்போதே எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்தன.
மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இப்படி மொத்தம் 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்ஏ நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இதில் காங்கிரஸ் எம்பி மூத்த வழக்கறிஞர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலர் பணமதிப்பு நீக்கத்திற்கு ஏன் தவறானது என்பதை விளக்கி வாதங்களை முன்வைத்தனர். தீர்ப்பு அதேநேரம் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்தது. ரிசர்வ் வங்கி ஆர்பிஐ பரிந்துரை அடிப்படையில்தான் முடிவுகளை எடுத்தோம் என்றும் காலத்தைப் பின்னோக்கிக் கொண்டு எதையும் மாற்ற முடியாது என்றும் மத்திய அரசு வாதிட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நீதிபதிகள் நீதிபதி எஸ்ஏ நசீர், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். அதேநேரம் நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இருப்பினும், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், இதற்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாஜக தலைவர்கள் பலரும் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்துத் தீர்ப்பு வந்த பிறகு முதல்முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
பணமதிப்பு நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் (4-1 பெரும்பான்மையுடன்) பணமதிப்பிழப்பு விவகாரத்தைக் கவனமாக ஆராய்ந்த பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்துள்ளது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட பல மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே 6 மாதங்களாக ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய (பணமதிப்பு நீக்கம்) நடவடிக்கையைக் கொண்டுவர நியாயமான தேவை இருந்தது. மத்திய அரசில் இருந்து முன்மொழியப்பட்டதால் மட்டுமே இந்த முடிவெடுக்கும் செயல்முறை தவறானது என்று கருத முடியாது. பிரிவு 26(2) ஆர்பிஐ சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீக்க முடியாது. பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். நிபுணத்துவத்துடன் இருக்கும் நிர்வாகத்தை நீதிமன்றம் அதன் ஞானத்துடன் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு தான் மத்திய அரசின் முடிவை எடுத்துள்ளது. இது மத்திய அரசின் அதிகாரங்களுக்கு எதிராக இருக்கும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பைக் காட்டுகிறது. ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரப் பகிர்வு இருப்பதாகக் கூற முடியாது. இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி கூட “கறுப்புப் பணம், பயங்கரவாத நிதி மற்றும் கள்ளநோட்டு போன்ற நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் தீமைகளைக் குறிவைக்கப் பணமதிப்பு நீக்கம் என்பது நல்ல நோக்கத்தோடும், நன்கு சிந்தித்தும் எடுக்கப்பட்ட முடிவு என்றே கூறியுள்ளார்” என்று அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.