தனியார் டிவி சேனல் செய்தியாளரிடமும், யூடியூப் நிருபர்களிடமும் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாராக இருந்தாலும் சேனல் பெயரையும் செய்தியாளர் பெயரையும் கூறி விட்டு கேள்வி கேளுங்கள் என்று அவர் கறாராக கூறினார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று தி.நகர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பேட்டிக்குப் பிறகு முன்னாள் எம்.பி. மஸ்தான் மரணத்தை பற்றியும் ஈரோடு பெண் மரணம் குறித்தும் செய்தியாளர்களும் அண்ணாமலைக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. ஈஷாவில் கொலை நடந்ததாக கூறியது ஏன் என்று நிருபரிடம் கேட்டார் அண்ணாமலை. கொலையாளிக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்றும் தடாலடியாக அவர் கேட்டார். திமுக அமைச்சர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு உள்ளது. வீடியோ ஆதாரத்துடன் உள்ளது நான் தருகிறேன் அதை நீங்கள் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டார் அண்ணாமலை.
இதனால் வெறுத்துப்போன புதியதலைமுறை டிவி நிருபர், “ஒவ்வொருமுறையும் நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் ஆனால் ஆதாரத்தை தர மறுப்பது ஏன்..” என்று பதிலுக்கு கேள்வி கேட்டார். இந்த கேள்வியால், ஆவேசமாக கோபப்பட்ட அண்ணாமலை, பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆதாரம் உள்ளது அதை ஒளிபரப்புவீர்களா என்று புதிய தலைமுறை செய்தியாளரிடம் கேட்டார். நான் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் அரை மணி நேரம் உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும். புதிய தலைமுறை செய்தியாளரிடம் இப்போது நான் ஆதாரங்களை தருவேன் அவர் அதை அரை மணி நேரம் ஒளிபரப்பு செய்து விட்டு வந்து அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். நான் கொடுக்கும் ஆதாரங்களை போடாமல் ஒரு கட்சிக்கு ஜால்ரா அடித்து விட்டு இங்கே வந்து கேட்கக்கூடாது. நான் பிஜிஆர் ஆதாரத்தை பிரஸ்மீட்டில் கொடுத்தும் அதை நீங்கள் ஒளிபரப்பு செய்ய வில்லை. சும்மா வந்து கேள்வி கேட்டு கதை விடக்கூடாது. நான் கொடுக்கும் ஆதாரத்தை போடாமல் முதலமைச்சர் டீ குடித்தார், காபி குடித்தார், முதலமைச்சர் சைக்கிளில் போகிறார் என்று தானே செய்தி போடுகிறீர்கள். நீங்க வாங்க நான் ஆதாரம் தருகிறேன் அதை ஒளிபரப்ப வேண்டும். முதலில் பிஜிஆர் எனர்ஜி பற்றிய ஆதாரம் தருகிறேன் வரிசையாக ஒவ்வொன்றாக தருகிறேன் என்றார்.
அண்ணாமலையின் கோபம், கேள்வி கேட்ட யூடியூப் நிருபர் ஒருவர் மீது அடுத்ததாக திரும்பியது. 40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக்கொண்டு லைக் வாங்குவதற்காக யூடியூப் சேனல்காரர்கள் கேள்வி கேட்கிறீர்கள். என் பெயர் அண்ணாமல் நான் பாஜக, அதே மாதிரி என்னிடம் கேள்வி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் பத்திரிக்கையாளர் என சொல்ல கூடாது. சேனல் பெயரையும் ரிப்போர்ட்டர் பெயரையும் கூறி விட்டு கேள்வி கேளுங்கள் என்று கொந்தளித்தார் அண்ணாமலை. என்னுடைய செய்தியை கவர் செய்ய வேண்டும் என்று நான் யார் காலிலும் விழவில்லை. இனிமேல் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் பாஜக அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க வரவேண்டாம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்த கொந்தளிப்பு சூழ்நிலையை தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து புதிய தலைமுறை செய்தியாளரிடம் பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆதாரங்களை கொடுத்துள்ளார் அண்ணாமலை. இதையடுத்து, நீங்கள் நேரடியாக விவாதத்திற்கு வாருங்கள் என்று புதிய தலைமுறை செய்தியாளர் அழைத்துள்ளார். ஆனால் என்னையே விவாதத்திற்கு அழைக்கிறீர்களா? எனக்கு பதில் நாராயணன் திருப்பதிதான் விவாதத்தில் வந்து பேசுவார் என்று அண்ணாமலை கூறியதாகவும், தன்னை ஒருமையில் பேசியதாகவும் குற்றம் சாட்டினார் புதிய தலைமுறை செய்தியாளர். ஆதாரத்தை வெளியிடுவேன் என்று கூறியவர் விவாதத்திற்கு வர மறுப்பது ஏன் என்றும் செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே டிவி சேனல் வெளியிட்ட ஒரு வீடியோவில், அண்ணாமலை ரூமிற்குள் சென்று நடந்தவை குறித்து விளக்கமளிக்க ஒரு முன்னணி சேனல் நிருபர் போனபோது அவரது செருப்பை வெளியே கழற்றி வைத்துவிட்டு உள்ளே வருமாறு அண்ணாமலை ஆபீசிலிருந்த ஒரு சிலர் தடித்த குரலில் பேசும் காட்சி வெளியாகியுள்ளது. உள்ளே போனபிறகும், அந்த சேனல் நிருபரிடம் நீங்கள் கவர் செய்யாவிட்டால் போங்க என விரட்டும் தொனியில் அண்ணாமலை பேசியதும் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதனால் உரிய கேள்விக்கு பதில் கிடைக்காமல் பத்திரிக்கையாளர் சந்திப்பின் நோக்கமே சிதறிவிட்டதாக பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் பத்திரிக்கையாளர் அமைப்புகளும் இந்த மிரட்டல்கள் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது, காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்து கருத்துக் கூறிய அண்ணாமலை, என்னுடைய பாலிசி, கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதே எனது வாடிக்கை. எங்குச் சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும், வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைக்கணும். கட்சியிலிருந்து வெளியே செல்வோர் என்னையோ, கட்சியையோ புகழ்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. மகளிர் அதிகளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால், எனக்கு எந்த வருத்தமும் கிடையாது என்று அண்ணாமலை கூறினார்.