டெல்லியில் மரணமடைந்த இளம்பெண் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார் மணீஷ் சிசோடியா!

காரில் இழுத்துச் செல்லப்பட்டதில் மரணமடைந்த இளம்பெண் அஞ்சலி சிங்கின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

டெல்லியின் கஞ்சாவாளா பகுதியில், ஸ்கூட்டர் மீது கார் மோதி, தவறி விழுந்தபோது, காரின் சக்கரத்தில் கால் சிக்கிக் கொண்டதால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், 20 வயது இளம்பெண் அஞ்சலி சிங் பலியானார். இந்த நிலையில், மணீஷ் சிசோடியா, இன்று அஞ்சலி சிங்கின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, இது மிகக் கொடூரமான சம்பவம். 20 வயது இளம்பெண்தான், அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவருக்கு சகோதர, சகோதரிகள் உள்ளனர். ஒட்டுமொத்த சம்பவமும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அஞ்சலி சிங், தங்களது காரில் சிக்கிக் கொண்டது அதில் இருந்தவர்களுக்குத் தெரியும் என்று தோழி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதில் முதல் விஷயம் என்னவென்றால், ஸ்கூட்டர் மீது கார் மோதிய போது, பலியான பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் பயணித்தது என்பதுவே. சிசிடிவி காட்சிகள் மூலம் அதனைக் கண்டுபிடித்த காவல்துறையினர், நேற்று அவரது அடையாளங்களைக் கண்டுபிடித்து, அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

அஞ்சலியின் தோழியாக அறியப்படும் நிதி காவல்துறையிடம் கூறுகையில், நாங்கள் இருவரும் வந்த ஸ்கூட்டரை கார் இடித்த போது, நான் சாலையின் ஒருபக்கம் விழுந்துவிட்டேன், தோழி மறுபக்கம் விழுந்துவிட்டார். அவர் மீது கார் ஏறியபோது, கார் சக்கரத்தில் அவர் மாட்டிக் கொண்டார். அதனை காரில் இருந்த அனைவருமே அறிந்திருந்தனர். ஆனாலும் அப்படியே காரை செலுத்தினர் என்று நிதி தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அங்கிருந்து அப்படியே ஓடி வீட்டுக்கு வந்துவிட்டேன். யாரிடமும் நடந்த எதையும் சொல்லவில்லை. அஞ்சலி வண்டி ஓட்டும் நிலையில் இல்லை. நான் வண்டி ஓட்டுகிறேன் என்று சொல்லியும் கூட, என்னை நம்பாமல், தானே வண்டியை ஓட்டி வந்தார் என்றும் நிதி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் வெளியான தகவலில், பெண்ணின் உடல் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 12 கி.மீ. தொலைவுக்கு பெண்ணின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுல்தான்புரியில் இருந்து குதுப்கா் பகுதியை நோக்கிச் சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்டதில், அவா் உயிரிழந்தாா். அந்தப் பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் மீது காா் மோதியது. அப்போது, எதிா்பாராதவிதமாக அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கி, 12 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக காரில் இருந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பை இவர் செய்து வந்ததாகவும், பகலில் வேலைக்குச் சென்று வந்த இவர், மாலையில் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தில் பகுதிநேர பணியாளராக பணியாற்றியதாகவும், அவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் வேலை செய்துவிட்டு தோழியுடன் வீடு திரும்பும்போதுதான் இந்த கோர விபத்தில் சிக்கியதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் மீதும் புதிய குற்றச்சாட்டுகள் சோ்க்கப்படலாம் என்று சிறப்பு காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகா் ப்ரீத் ஹூடா தெரிவித்தாா். இதற்கிடையே, விபத்தில் இறந்த பெண் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது உடல் கூறாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.