சென்னையில் சாலை விபத்து ஒன்றில் பெண் இன்ஜினியர் பலியான சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனவர் ராமதாஸ், இனி தமிழக அரசின் அலட்சியத்தால் உயிர் பலி ஏற்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை போரூரை சேர்ந்தவர் ஷோபனா (22). பொறியியல் பட்டதாரியான இவர், ஊரப்பாக்கத்தை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். இந்நிலையில், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்ற போது, அங்கிருந்த பெரிய சாலைப் பள்ளத்தில் ஷோபனாவின் ஸ்கூட்டர் இறங்கியதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த மணல் லாரி ஒன்று ஷோபனா மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த கோர விபத்தில் ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெண் இன்ஜினியர் ஷோபனா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இருந்த பள்ளத்தால் ஒரு இளம்பெண்ணின் உயிர் போய்விட்டதே என்ற வருத்தத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதனிடையே, அவர் பணிபுரிந்து வந்த ஐடி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, “மோசமான சாலையால் ஒரு ஊழியரை நாங்கள் இழந்துவிட்டோம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் வைரலானது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை மதுரவாயல் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது லாரி ஏறி உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு, எந்தத் துறையின் பொறுப்பு என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாக இந்த சாலை பராமரிக்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ஆம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் அலட்சியத்தால் இனியும் உயிர் பலி ஏற்படக்கூடாது.
மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றாலும், பருவமழை காரணமாகவும் சென்னையில் பெரும்பான்மையான சாலைகள், பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஒரு உயிர் கூட பறிபோகக்கூடாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.