கால்பந்து உலகின் மன்னன் பீலேவின் உடல் நல்லடக்கம்!

கால்பந்து உலகின் மன்னன் பீலேவின் உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீர் கடலுக்கு இடையே பெரும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

உலகளவில் கால்பந்து மீதான மோகத்தை அதிகரித்ததற்கும், அதற்கான ரசிகர்களை பரப்பியதிலும் பிரேசிலை சேர்ந்த ஜாம்பவான் பீலேவுக்கு முக்கிய பங்கு உண்டு. பிரேசில் அணிக்காக 3 உலகக்கோப்பைகளை வென்று அசைக்க முடியாத சாதனைகளை படைத்த அவர் தனது 82 வயதில் காலமாகியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று உயிரிழந்தார். பீலேவின் உடல் நேற்று முன் தினம் அவரின் சொந்த ஊரான சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கும் மேல் அங்கு வைக்கப்பட்டிருந்த உடலை காண உலகெங்கும் இருந்து பல ரசிகர்களும் குவிந்தனர். அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பீலேவின் பெயர் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதே போல பீலே உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பிஃபா தலைவர் இன்பான்டினோ, உலகின் அனைத்து நாடுகளும் தங்களிடம் உள்ள மைதானங்களில் ஏதேனும் ஒன்றுக்கு பீலேவின் பெயரை வைத்து கவுரவிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் பீலேவின் உடல் சான்டோஸில் உள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் ஜாம்பவான் பீலேவுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். பீலேவின் இல்லத்தின் முன்பு மட்டும் சில நிமிடங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. அங்கு தனது மகன் உயிரிழந்த செய்தியை கூட புரிந்துக்கொள்ள முடியாமல் 100 வயதாகும் பீலேவின் தாய் இருந்தது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இறுதியில் உலகின் மிக உயரமான கல்லறை தோட்டமான நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்திற்கு அவரது உடல் சென்றது. அங்கு அவரது குடும்பத்தினர் மட்டும் இறுதி மரியாதைகளை செய்து, 9வது மாடியில் பீலே என்று பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

9வது மாடி தேர்வு செய்ததற்கு ஒரு காரணம் உண்டு. பீலே தனது கால்பந்து பயணத்தை தொடங்கியது, தன் வாழ்வில் நிறைய போட்டிகளை விளையாடியது சாண்டோஸ் கிளப் மைதானத்தில் தான். எனவே 9வது மாடியில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பார்த்தால் அந்த மைதானம் தெளிவாக தெரியும். மறைவுக்கு பின் ஸ்டேடியத்தை நோக்கி இருக்க வேண்டும் என பீலே ஆசைப்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் தான் அவரின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.