பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வாத்தை முன்வைத்த நிலையில், பள்ளி மாணவர்கள் மது போதையில் ரகளை செய்வதற்கு தான் பொறுப்பில்லை என அமைச்சரான செந்தில் பாலாஜி எப்படி கூற முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க நிர்மல் குமாருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், சி.டி.ஆர்.நிர்மல் குமார், செந்தில் பாலாஜி மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்காமல் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதாக வாதிட்டார். தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்காக செந்தில் பாலாஜியை எப்படி குறை சொல்ல முடியும் எனவும், அவர் முதலமைச்சரோ அல்லது உள்துறை அமைச்சரோ அல்ல எனவும் அவர் வாதிட்டார்.
மேலும், துறை சார்ந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம் எனவும், பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், மது போதையில் ரகளை செய்வதற்கும் எப்படி துறையின் அமைச்சர் பொறுப்பேற்க முடியும் எனவும் கடந்த ஆட்சியிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் மது அருந்துவது அதிர்ச்சியைத் தருகிறது. இது போன்ற நிகழ்வுகளுக்கு தனக்கு பொறுப்பில்லை என அமைச்சரான செந்தில் பாலாஜி எப்படி கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது.