உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக 25 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.

இதுகுறித்து இருதய சிகிச்சை நிறுவத்தின் கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட தகவலின்படி, ஜன.5-ஆம் தேதி இருதய நோய் பாதிக்கப்பட்ட 723 பேர் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்களில் 41 பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அவற்றில் சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் அதிக குளிர் தாங்கமுடியாமல் உயிரிழந்தனர். இதுதவிர 17 பேர் இறந்த நிலையில் சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

இதுகுறித்து கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக ஆசிரியர் கூறுகையில், இந்த காலநிலையில் குறிப்பாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டுமின்றி, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை மக்கள் வீட்டிற்கு வெளியே செல்லாமல், பாதுகாப்பாக வீட்டினுள் இருப்பது நல்லதென்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.