திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த 31ம் தேதி திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட்டு இருந்த பெண் போலீசார் ஒருவரை திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர் தவறகா சீண்டியதாக கூறப்படுகிறது. அந்த பெண் போலீசாரிடம் கூட்டம் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். பெண் போலீசாரிடமே அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதேபோல், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதற்கிடையே, திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர்தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் இவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் இருவரையும் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரும் அங்கு இருந் சாட்சியங்களிடம் நேரில் விசாரணை செய்தனர். அந்த பெண் போலீஸ் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏகாம்பரம் பிரவீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திமுக கூட்டத்தில் முறைகேடாக நடந்து கொண்டதாக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை முற்றிலும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிராகரித்துள்ளார். புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் புதிதாக மின் தூக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தை தொடங்கி வைத்த பிறகு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போதைப் பொருள் கடத்தலை தடுக்க தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிரது. ஆபரஷேன் கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 ஆகிய நடவடிக்கைகளின் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பிரிவு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட விவகாரத்தில் சம்பவம் நடைபெற்ற உடனேயே விசாரணை நடத்தி உண்மையிலேயே அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்பதை உறுதி செய்த மறுநிமிடமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையும் விசாரணை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் போடப்பட்ட தேதியை வேண்டும் என்றாலும் பாருங்கள். கைது நடவடிக்கை விசாரணை அடிப்படையில் தான் செய்ய முடியும். இதுபோன்ற விவகாரங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கிறோம். பெண் காவலர்கள் மீது தாக்குதல் என்றால் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ.. அதன்படி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலர்கள் சில நேரங்களில் கடுமையான வேலைகள் செய்யும் போது குற்றவாளிகள், ஆயுதம் ஏந்திய குற்றவாளிகளை பிடிக்க முயற்சிக்கும் போது காவலர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் கூட பூமிநாதன் என்ற போலீஸ் படுகொலை செய்யப்பட்டார். காவல்துறை என்பது கொஞ்சம் ரிஸ்க் ஆன வேலைதான். கொஞ்சம் ஆபத்துக்கள் வரும்.. அந்த நேரத்தில் அந்த குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது எடுக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதுதான் பெரிய தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.