கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உக்ரைனில் 36 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரஷ்ய படையினருக்கு அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்டுள்ளாா். இந்நிலையில் ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம் என உக்ரைன் விமர்சனம் செய்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மோதல் 316வது நாளை எட்டிவிட்டது. இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை. தற்போது முதன்முறையாக அவர் சம்மதம் தெரிவித்து உள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்ய பகுதியாக ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியாக இன்று மதியம் முதல் நாளை வரை 36 மணி நேரம் போரை நிறுத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம். உக்ரைனில் ரஷ்யா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். போர் முடிவு பிரகடனம் ரஷ்யாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை. ஆயுதங்களை குவிக்கவே ரஷ்யா போர் நிறுத்த நாடகம் செய்கிறது. தங்களது தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
புராதன ஜூலியன் நாள்காட்டியைப் பயன்படுத்தும் ரஷியா்கள், ஜனவரி 7-ஆம் தேதியை கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடுகின்றனா். பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிரகோரிய நாள்காட்டியை விட அது 13 நாள்கள் பின்தங்கியதாகும். முன்னதாக, ரஷ்யாவின் மரபுவழி திருச்சபை தலைமை பாதிரியாா் கிரில் இதுதொடா்பாக வேண்டுகோள் விடுத்திருந்தாா். அவா் கூறியதாவது:
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ரஷ்யாவும் உக்ரைனும் போரை நிறுத்திவைக்க வேண்டும். அதற்காக, உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
அவரது வேண்டுகோளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த உக்ரைன், ரஷ்ய தலைமை பாதிரியாரின் இந்த கருத்து உக்ரைனை சிக்கவைப்பதற்கான சதி என்றும், ரஷ்யாவின் பிரசார உத்தி என்றும் விமா்சித்துள்ளது.
ஆனால், தலைமைப் பாதிரியாரின் இந்த வேண்டுகோளையடுத்து போா் நிறுத்தத்தை அதிபா் புதின் அறிவித்தாா்.
ஒருவேளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் அது, நடக்க வேண்டும் என உலக நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளன.