மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு!

மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடனான சந்திப்பிற்கு பிறகு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மருத்துவத் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.801 கோடியை மத்திய அமைச்சர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம். உக்ரைனில் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கக் கோரினோம். தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரி நிறுவக் கோரிக்கை வைத்தோம். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவும் மத்திய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தோம்.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கி நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கவும் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினோம். கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வழங்கக் கோரினோம். மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகள் மீது தமிழ்நாடு அரசின் ஆட்சேபணையை தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.