திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 10 நாள் விசாரிக்க அனுமதி!

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு இன்று முதல் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சின் அருகே விழுஞ்சியம் துறைமுகம் கடற்கரை பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த படகை சோதனை செய்தபோது அதில் 300 கிலோ ஹெராயின், பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இதில் 16 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மேலும் இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள திருச்சி சிறப்பு முகாமிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான செல்போன்கள், லேப்டாப்கள், சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்கள் மூலம் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜ், கோட்டைகா மணி, தனுக்கா ரேஷன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கென்னடி பெர்னான்டோ, முகமது அனீஸ், திலீபன், சுரங்கா, லதியா, செல்வராஜ், அஜிதா நோயல் குமார் ஆகிய 11 பேரை கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சர்வதேச போதை கும்பலுடன் இவர்களுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து 11 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 11 பேரையும் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதிபதி 11 பேரையும் நாளை முதல் வரும் 17ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து 11 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். இன்று புழல் சிறையில் இருந்து 11 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அழைத்து செல்ல உள்ளனர். விசாரணைக்கு பின்னரே சர்வதேச போதை கும்பலுடன் இவர்களுக்கு என்ன மாதிரி தொடர்பு இருந்தது போதை பொருட்கள் எங்கிருந்து எல்லாம் கைமாற்றப்பட்டது என்னென்ன சதி திட்டங்கள் தீட்டி வைத்திருந்தார்கள் என்பது குறித்து தெரியவரும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.