தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது: மக்கள் நீதி மய்யம்

திராவிடம் இந்திய தேசம் தழுவியது, திராவிடத்தின் பெயரால் தமிழ்நாட்டை பிரித்தாளும் ஆளுநரின் சூழ்ச்சி பலிக்காது. தமிழின் பெயரால் சதிராடும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிப்பதாக மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காசியில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்காக அரசு செலவில் ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஆளுநர் கே.என்.ரவி பேசியிருக்கிறார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்து, அரசியல் சாசனத்தையே கேலிக்கூத்தாக்குவது போல் மதவாத சக்திகளான பாஜக, ஆர் எஸ்.எஸ், சங்பரிவார் இயக்கங்களின் ஏஜெண்டாக திராவிடம் குறித்தும், தமிழ்நாடு பெயர் குறித்தும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள், மசோதாக்களை செயல்படுத்த குறித்த காலத்தில் அங்கீகரித்து, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைப்பதும், பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு மதவாத சக்திகளின் கைப்பாவை போலவும், ஒரு சார்புநிலை அரசியல்வாதி போலவும் ஆர்.என்.ரவி அவர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் போது இவரைப் போன்றவர்கள் பின்னாளில் வந்து இந்திய அரசியல் சாசனத்தையே கேலிக்கூத்தாக்குவார்கள் என்பதை மனதில் வைத்து தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையற்றது” என அப்போதே கூறியிருக்கிறார் என்பது தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஐயன் வள்ளுவன் எழுதிய திருக்குறளையும், மீசைக்கவி பாரதி எழுதிய கவிதைகளையும் நுனிப்புல் மேய்வது போல் பேசி விட்டு, தமிழ் மொழியோடும், தமிழ் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்திருப்பது போல் ஊடகங்கள் முன்பும், ஒளிப்பட கருவிகள் முன்பும், பொது மேடைகளிலும் தங்களின் உலக மகா நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் பிரிக்க நினைத்தால் ஏமாறப் போவது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும், அவருக்கு பின்னால் இருந்து அவரை ஆட்டுவித்துக் கொண்டிருப்போரும் தான் என்பதை தமிழ்நாடு விரைவில் உறுதி செய்யும்.

ஏனெனில் திராவிடர், திராவிடம் என்பது திக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அல்ல என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உணர வேண்டும், அந்த கட்சிகளின் பெயரில் திராவிடம் இருப்பதால் மட்டுமே அது தான் திராவிடம் என்பதாகி விடாது என்பதையும், “இந்தியா என்கிற தேசம் இருக்கும் வரை திராவிடமும் நிலைத்து நிற்கும், அதனை எவராலும், எந்த சக்தியாலும் அழிக்க முடியாது” என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடிக்கடி கூறுவது போல் தென்மாநிலங்கள் மட்டுமின்றி பரந்துபட்ட இந்தியா முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் அனைவருமே திராவிடத்தின் அடையாளம் தான். அந்த அடையாளம் தான் அனைவரது குருதியிலும் நீக்கமற கலந்திருக்கிறது. அதைத் தான் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இந்திய தேசியகீதமும் இன்று வரை உணர்த்தி வருகிறது.

தமிழ் மீது பற்று கொண்டவர்கள் போல் நாடகமாடி, நயவஞ்சகமாக தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய நினைத்தால் நயவஞ்சக குள்ளநரிகளுக்கு எதிராக கடந்த காலங்களைப் போல் நிகழ்காலத்திலும் தமிழ்நாடு அதற்கான எதிர்வினையாற்ற தயங்காது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ்நாட்டில் எங்களது முன்னோர்கள் போராடிப் பெற்ற உரிமையை திராவிடத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி வீழ்த்த நினைத்தால் ஆளுநருக்கும், அவரை ஆட்டுவிப்போருக்கும் அதே திராவிடத்தால் தமிழ்நாடு தகுந்த நேரத்தில், தக்க பாடம் புகட்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் உணர்த்தும். எனவே மத்தியில் ஆள்பவர்ளுக்கு கூஜா தூக்கும் அரசியல்வாதிகளைப் போலில்லாமல், மதவாத சக்திகளின் மறுபதிப்பாகவும் இல்லாமல், விளம்பர யுக்திகளுக்காக செயல்படாமல் ஆளுநர் என்கிற பொறுப்பான (பொம்மை) பதவியை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக மட்டும் ஆக்கபூர்வமான வகையில் செயல்படுத்துவதே அப்பொறுப்பில் இருப்போருக்கு கெளரவமாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 6 மொழிகளில் ‛தமிழ்நாடு’ எனக்கூறி ஆளுநர் ஆர்என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழில் ‛தமிழ்நாடு வாழ்க’ எனவும், மலையளத்தில் ‛தமிழ்நாடு விஜயிக்கட்டும்’ எனவும், தெலுங்கு மொழியில் ‛தமிழ்நாடு வர்த்திலாலி’ எனவும், கன்னடத்தில் ‛தமிழ்நாட்டுக்கு ஜெயவாகலி’ என்றும் இந்தியில் ‛தமிழ்நாடு ஜெய்ஹோ’ எனவும் ஆங்கிலத்தில் ‛லாங் லிவ் தமிழ்நாடு‛ எனவும், லாங்லிவ் இந்தியா எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.