ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்: சீமான்

ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை என சீமான் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் ஆளுநருக்கு வேறு வேலையில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த பேச்சு எல்லாம் ஆளுநருக்கு சரியாக இருக்கும்.. சுப்ரமணியன் சுவாமிக்கு சரியாக இருக்கும். அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைக்கும் முன்பே திருநெல்வேலியில் கல்வெட்டு உள்ளது. பக்தவச்சலம் அய்யா இருக்கும் போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் என்றுதான் உள்ளது. இரட்டைமலை சீனிவாசன் 1926-லேயே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து இருக்கிறார். இருந்தா இரு இல்லைன்னா ஓடு உங்களுக்கு தமிழகம் என இருக்கிறது.. அவர்கள் சொல்லிக்க வேண்டியதுதான். எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு இல்லைன்னா ஓடு அவ்ளோதான். தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது.

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தனது கடிதத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் என போட்டு வந்தார். ஆனால், நமது தற்போதைய முதல்வர் இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும் தமிழகம் என்றே போடுகிறார். இரண்டுமே தவறுதான். தமிழ்நாடு முதல் அமைச்சர் என்றால் சகாயம் ஐ.ஏ.எஸ், இறையன்பு ஐ.ஏ.எஸ், சைலேந்திரபாபு ஐபிஎஸ் என்பது போன்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மாறிவிட்டதா? இதற்கு நியாயமான பொருள் வரவேண்டும் என்றால் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் என்றே இருக்க வேண்டும். தமிழ்நாடு முதல் அமைச்சர் என்றால் தமிழ்நாடே முதல் அமைச்சர் ஆகிவிட்டது போல பொருளாகிறது. எனவே இதை மாற்றி இனி தமிழ்நாட்டு முதல் அமைச்சர் என்று சொல்ல வேண்டும். ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை. இந்த காதில் வாங்கி இந்த காதில் விட்டுட்டு போய்விட வேண்டும். நமக்கு கோடி வேலை இருக்கு. அவருக்கு ஒரு வேலையும் இல்லை. எதையாவது பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இவ்வாறு அவர் கூறினார்.