அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவி!

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹெவிட்ச்சர்கள் எனப்படும் தானியங்கி பீரங்கி, கவச வாகனங்கள், மார்டர் எனப்படும் இலகு ரக பீரங்கிகளையும் வழங்க உள்ளது. இந்த ராணுவ உதவி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வழங்கப்படுகிறது.