அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் முகமது ஜின்னா, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் விசாரணையை பிப்ரவரி மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.