உக்ரைன் உடனான போருக்கு மத்தியில் ரஷ்யாவில் நேற்று சனிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிரெம்ளினில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனையில் தனியொரு நபராக அதிபா் விளாதிமீா் புதின் மட்டும் கலந்துகொண்டாா்.
புராதன ஜூலியன் நாள்காட்டியைப் பயன்படுத்தும் ரஷ்யா்கள், ஜனவரி 7-ஆம் தேதியை கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடுகின்றனா். பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிரகோரிய நாள்காட்டியைவிட அது 13 நாள்கள் பின்தங்கியதாகும். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி போரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரஷ்யாவின் மரபுவழி திருச்சபை தலைமை பாதிரியாா் கிரில் வேண்டுகோள் விடுத்தாா். அதனை ஏற்று 36 மணி நேர போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்தாா். இதையடுத்து, உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் போா் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதைத் தொடா்ந்து, ரஷ்யா்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். மாஸ்கோவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாா் கிரில் பிராா்த்தனைக் கூட்டத்தை நடத்தினாா். கிரெம்ளினில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனையில் அதிபா் புதின் மட்டும் கலந்துகொண்டாா்.
உக்ரைனிலும் ஜன. 7-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை உலகின் பிற பகுதிகளைப் போல் உக்ரைனில் டிச. 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட அந்நாட்டு மரபுவழி திருச்சபை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் போர் நிறுத்தத்தின் போது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள், தளவாடங்கள் மீது உக்ரைனிய ஆயுத படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அதே சமயம் தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள், ரஷ்யாவின் எதிர்தாக்குதலில் அடக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.