தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடவுள்ளது

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கூடியது. அக்டோபர் 18, 19 ஆகிய 2 நாட்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. பேரவை முடிவடையும் நாளில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளுக்கு தடை, ஹூக்கா பாருக்கு தடை உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை தள்ளி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கூடிய அந்த ஆண்டின் கடைசி கூட்டத்தொடரை முடித்துவைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். அந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிவடைந்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். முன்னதாக, கூட்டம் நடத்துவதற்கான தேதிகளை முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதல் பெறப்படும். அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி (நாளை) ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு அவை கூட இருப்பதாகவும் அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ள படி அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னர் கூடும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். திமுக அமைச்சரவையின் 35ஆவது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுதவிர, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறைகளும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு நடுவில் உள்ள இருக்கையில் அமர்வார் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதேபோல், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார் என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.