உத்தரகண்ட் மாநிலத்தில் ஜோஷிமட் நகரின் பல இடங்களில் ரை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேற்று பாா்வையிட்டாா்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அவுலி சுற்றுலாத் தலத்துக்கும் நுழைவு வாயிலான ஜோஷிமட் நகரில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும்படி முதல்வா் தாமி வெள்ளிக்கிழமை அதிகாரிக்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று சனிக்கிழமை பாா்வையிட்டாா். அப்பகுதி மக்களுடன் உரையாடிய முதல்வா், அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தாா்.
அப்போது, மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினா். பின்னர் செய்தியாளா்கள் சந்திப்பின்போது முதல்வா் புஷ்கா் சிங் தாமி கூறுகையில், ‘இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஆபத்தான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதிலே அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. நீண்ட கால அடிப்படையிலான மறுகுடியமா்வு திட்டம் குறித்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கலாசார மற்றும் சமய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஜோஷிமட் நகரத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.