கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதற்கிடையே சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு போடப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதனால் தொற்று பரவலும், உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்து உள்ளன. இதற்கிடையே சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் 15 முதல் கடந்த 4-ந் தேதிக்குள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
சீனாவின் மிகவும் புகழ்பெற்ற என்ஜினீயரிங் அகாடமியான இதில் 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் எந்தவொரு விஞ்ஞானியின் உயிரிழப்புக்கும் குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்துக்குள் இவ்வளவு முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாகும். அங்கு கடந்த 2017-2020 ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 17 பேர் உயிரிழந்து இருந்தனர். ஆனால் இந்த ஒரு மாதத்துக்குள் 20 பேர் உயிரிழந்திருப்பது நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.