மக்கள் தன்னை வழிபட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நடைபயணம் ஹரியானா மாநிலத்தில் நுழைந்துள்ளது. அவர் சமனாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தன்னை வணங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். பாரத் ஜோடோ யாத்ரா என்பது சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் பயத்திற்கு எதிரானது. பாத யாத்திரை சுய தியானம் பற்றியது. பணத்தைப் பயன்படுத்தி, நிறுவனங்களைக் கைப்பற்றி, அச்சத்தை உருவாக்குவதன் மூலம் மக்கள் வலுக்கட்டாயமாக தங்களை வழிபட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் விரும்புகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஜி இதை விரும்புகிறார், அதனால்தான் அவர் ஊடகங்களை சந்திக்கவில்லை. அவர் வணங்கப்பட வேண்டும், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அவரை வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்.
பகவத் கீதையில் கூறப்பட்டது போல், உன் வேலையைச் செய், நடக்க வேண்டியது நடக்கும். முடிவில் கவனம் செலுத்தாதே, இதுதான் இந்த யாத்திரையின் சிந்தனை. நாட்டில் உள்ள மக்களைப் பிரிப்பதன் மூலம் வெறுப்பு பரப்பப்படுகிறது. இந்து-முஸ்லீம், வெவ்வேறு சாதி மக்கள் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கிறார்கள். நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதே யாத்திரையின் நோக்கம். நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், இந்த சண்டை உண்மையில் அரசியல் அல்ல, மேலோட்டமாக இது ஒரு அரசியல் சண்டையாக இருக்கலாம். நாம் பகுஜன் சமாஜ் கட்சி அல்லது டிஆர்எஸ் கட்சியுடன் சண்டையிடும் போது அது ஒரு அரசியல் போட்டி. ஆனால் நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் அமைப்புகளை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாளில், சண்டை அரசியலாக இருக்கவில்லை. தற்போது இது வேறு போராட்டமாக மாறியுள்ளது. நீங்கள் இதை சித்தாந்தத்தின் சண்டை என்று அழைக்கலாம். ஆனால் இது அரசியல் சண்டை அல்ல.
நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை உள்ளது. நட்டின் வளங்கள், ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ராகுல் காந்தி எத்தனை கிலோமீட்டர் நடக்கிறார் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாயிகள் அல்லது கூலித்தொழிலாளிகள் எத்தனை கிலோமீட்டர் நடக்கிறார்கள் என்று மக்கள் ஏன் சொல்வதில்லை. இந்த பாரத் ஜோடா யாத்திரைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் பல நிகழ்ச்சிகள் தொடரும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.