தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்போம் என தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சிவகாசியில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது. தற்போது ஆட்சியைக் கைப்பற்றியதும் நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் உள்ளது. எனவே இரட்டை நிலைபாட்டில் திமுக உள்ளது என கூறலாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?. அதிமுக ஆட்சியில் தைப்பொங்கலுக்கு பயனாளிகளுக்கு ரூபாய் 2500 கொடுத்த போது ஸ்டாலின் ரூபாய் 5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்போது ஆட்சிக்கு வந்துவிட்ட ஸ்டாலின் பொங்கலுக்கு ரூபாய் ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
பாஜக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது. அதுபோல தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 70 பட்டாசு ஆலைகள் கடந்த 10 மாத காலங்களாக மூடப்பட்டுள்ளன என தகவல் வந்துள்ளது. இந்த மூடப்பட்ட ஆலைகளை உடனடியாக திறக்காவிட்டால் எங்க கட்சி சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
செவிலியர்கள் பிரச்னை, இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சினை என பல பிரச்னைகள் தமிழகத்தில் உள்ளது. தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திமுக அரசு புறக்கணிப்பு வருகிறது. இதனால் திமுக அரசு மிகப் பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழகம், தமிழ்நாடு என்பது குறித்து ஆளுநரின் கருத்து கண்டனத்திற்குரியது. அவரது பதவிக்கு இது வேண்டாத வேலை. தமிழகத்தில் உள்ளாட்சிப் பணிகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் தமிழகத்தில் லஞ்சம் ஊழல் பெருகிவிட்டது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, மது விற்பனை என பல வழிகளில் அரசுக்கு வருவாய் வருகிறது. ஆனால் அந்த பணம் எங்கே செல்கிறது. தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் நிர்வாகம் செய்ய இயலவில்லை என எழுதி கொடுத்துவிட்டு போங்கள்.
தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டி ஆலோசனை செய்து முடிவினை கட்சித் தலைவர் அறிவிப்பார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.