எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் இன்றுடன் முடிவடைந்தது; இதைத் தொடர்ந்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மூன்று நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி வாதத்தை தொடங்கியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல. மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதிமுக பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகள் குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும் பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது.
ஜூலை 11 பொதுக்குழுவில் 2460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு இபிஎஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5 சதவீத ஆதரவு. ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும்; ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு அது தெரியாதா?
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத போது கட்சி நலன் கருதி தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியும். அதிமுக பொதுக்குழுவை என் விருப்பப்படி நான் கூட்டியது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். ஆனால், உண்மையில் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கு பேர் விருப்பத்தின் அடிப்படையில் தான் கூட்டம் கூட்டப்பட்டது. கட்சியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கட்சியின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கானது அல்ல என வாதிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் இன்றுடன் முடிவடைந்தது; இதைத் தொடர்ந்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.