பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் பாலத்திலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி முதல் இந்தப் பாலத்தின் வழியாக ரயில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இதற்காக ஜனவரி 10 வரை பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பாம்பன் பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் குறித்த அறிக்கை, லக்னோ ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு தர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் மறுஅறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கான தடை நீட்டிப்பதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைக்கும் 2.05 கி.மீட்டர் நீளம் கொண்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மறு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது வரை 84 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாக இருக்கும். இது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தை இந்தியாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 105 ஆண்டுகள் பழமையானது. மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுடன் மண்டபத்தை இணைக்க 1914 ஆம் ஆண்டு அசல் பாலம் கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் கடல் ரயில் பாலத்துக்கு இணையாக ஒரு புதிய சாலைப் பாலம் கட்டப்படும் வரை இரண்டு இடங்களையும் இணைக்கும் ஒரே இணைப்பாக இது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.