அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு பரிசு வழங்காமல் இழுத்தடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் 2020-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசை வழங்காமல் இழுத்தடிப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, அந்த ஆண்டுக்கான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மதுரை கடந்த 2020-ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசை வழங்காமல் இழுத்தடிப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, அந்த ஆண்டுக்கான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-
நான் மதுரை மாவட்டம் விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவன். கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற நான், அதிக காளைகளை அடக்கியதாக விழா குழுவினர் அறிவித்தனர். இந்த போட்டியில் 2-ம் இடத்தை பிடித்ததாக கருப்பணன் அறிவிக்கப்பட்டார். ஆனால் முறைகேடாக நான் முதல் இடத்தை பிடித்ததாகவும், உண்மையில் கருப்பணன் தான் அதிக காளைகளை அடக்கியதாகவும், அவருக்கு முதல் பரிசு வழங்க வேண்டும் எனவும் கூறி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நான்தான் அதிக காளைகளை அடக்கினேன் என தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, விழா குழுவினர் ஏற்கனவே அறிவித்ததைப்போலவே பரிசு தொகுப்புகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
இதன் அடிப்படையில் எனக்கு முதல் பரிசையும், கருப்பணனுக்கு 2-வது பரிசையும் வழங்கும்படி விழா கமிட்டியிடம் விண்ணப்பித்தோம். ஆனால், இதுவரையிலும் எனக்கு முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட கார் வழங்கப்படாமல் இழுத்தடிக்கின்றனர். இதுகுறித்து கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவின்படி எனக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்காத விழா கமிட்டி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் சுந்தரராஜனுக்கு ஜாமீனுடன் கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.