வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை தொட்டது முதல் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளுக்கே பெயர்பெற்று வந்த எலான் மஸ்க், தற்போது உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் கூட ஒரு எதிர்மறையான விஷயத்துக்காகத்தான். அதாவது, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 182 பில்லியன் டாலர் வரை இழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு தகவல்கள் இதனை 200 பில்லியன் டாலர்கள் வரை என்று தெரிவிக்கின்றன.
துல்லியமான இழப்பு தெரியவருவது அசாதாரணமானது என்றாலும், மஸ்க் இழந்திருக்கும் இழப்பானது, ஏற்கனவே பதிவான இழப்பை விட மிக அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு, 2000ஆவது ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர் மசாயோசி 58.6 பில்லியன் டாலர்களை இழந்திருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்துள்ளது. அதாவது, எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பானது 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 320 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், இது 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 137 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது என்கிறது தரவுகள்.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்க, 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனப் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார். மீண்டும் நவம்பர் மாதம் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தார். இப்படி படிப்படியாக அவர் 23 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து, இன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.