அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து பெருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்ய வேண்டும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அவ்வப்போது வன்முறை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெருவின் தென் கிழக்கில் ஜூலியாகா நகரில் உள்ள விமான நிலையம் அருகே முன்தினம் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது பெட்ரோ காஸ்டிலோவின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதனை அடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை ஒடுக்கினர். இதில் 18 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தெற்கு புனோ பிராந்தியத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஆல்பர்டோ ஒட்டரோலா அறிவித்துள்ளார். 3 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த 3 நாட்களுக்கு உள்ளூர் நேரப்படி, இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.