தமிழக ஆளுநர் ரவி இந்தியராக சிறப்பாக செயல்படுகிறார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் ஆளுநர் ரவி சிறப்பாக செயல்படுகிறார்; இந்தியராக செயல்படுகிறார். தமிழக மக்களின் வாழ்வாதாரம் நன்றாக இல்லை. தமிழகம் என்று சொன்னால் என்ன குற்றமாகி விடப் போகிறதா? தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநரை சபைக்கு அழைத்து அவமானப்படுத்துவது நியாயமா? தமிழக அரசு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக ஆட்சியின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், அவற்றை திசை திருப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது.
தமிழகத்தில் இளைஞர்கள் சினிமாவிற்காக நள்ளிரவில் சென்று உயிரை இழக்கிறார்கள். அவர்கள் அடித்துக் கொள்வதும் ஏன் என்று தெரியவில்லை. இளைஞர்கள் உள்ளிட்டோர் மது, போதை மாத்திரை, கஞ்சா ஆகியவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர். தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் போதை மாத்திரைகள் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே தமிழக அரசு முற்றிலுமாக மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.