ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு 41 பேர் பலியாகியும் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் நெல்லை மாவட்டத்தில் உயிரிழந்த நிலையில் இன்று தூத்துக்குடி அருகே ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு அனுப்பிய தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் சூதாட்ட நிறுவனத்தினருக்கு தேநீர் வழங்கி உபசரிக்கிறார் ஆர்.என்.ரவி.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த 03.08.2021-இல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41 ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை கொண்டது பெரும் சோகமாகும்.
தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி இழந்தது தான் பாலனின் தற்கொலைக்கு காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும். 41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக்கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது. இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.