புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கிடையே இந்தத் திட்டத்திற்குப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் முன்வைத்தது. அதில் முக்கியமானது மாநிலத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். திமுக ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், இன்னும் இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர். இருப்பினும், விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரியில் மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்குப் புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் எந்தவொரு அரசு உதவித்தொகையும் பெறாமல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு இப்படி மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அங்கு வருமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகள், மற்ற உதவித்தொகை எதையும் பெறாமல் இருந்தால்.. அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான கோப்புகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கியது. பொங்கல் விழாவுக்கு முன்பாகவே இந்தத் திட்டத்தைத் தொடங்க புதுச்சேரி அரசு ஆர்வம் காட்டி வந்தது. இதன் காரணமாகவே கோப்புகள் உடனடியாக தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இதனிடையே இந்தத் திட்டத்திற்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி கொடுத்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆளுநர் தமிழிசை இத்திட்டத்தின் கோப்புகளுக்கு அனுமதி தந்துள்ள நிலையில், புதுச்சேரியில் இத்திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் எந்தவொரு அரசு உதவித்தொகையும் பெறாத வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. அங்கு 21 வயது முதல் 55 வயதுக்குள் இருக்கும் அரசு உதவித் தொகை பெறாத குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படவுள்ளது.