தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயம்: புதிய சட்ட மசோதா பேரவையில் தாக்கல்!

தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்று ஏற்கெனவே மாநில அரசு அரசாணை மூலம் தெரிவித்திருந்த நிலையில், அந்த அரசாணைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் உச்சத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கையில் இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தொடர் புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டின் வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி இருந்தன. இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறும் நபர்கள் தமிழ் மொழியில் போதுமான அளவு அறிவை கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.