அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தனி பங்களாவில் முக்கிய அரசு ஆவணங்கள் இருந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
நவம்பர் மாதத்தில் வாசிங்டனில் உள்ள பென் பைடன் மையம் எனப்படும் அவரின் அலுவலகத்தில் இருந்து அதிபரின் வழக்கறிஞர்கள் 10க்கும் மேற்பட்ட அரசின் ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அதனைத் தேசிய ஆவணங்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவை அதிபர் ஜோ பைடன் துணை அதிபராகப் பதவி வகித்தக்காலத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அரசின் ஆவணங்களைக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை ஒப்படைக்கப்படாத ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் சர்ச்சைக்குள்ளான சூழ்நிலை நிலவுகிறது.
பதவிக் காலம் முடிந்தவுடன் அரசின் ஆவணங்கள் திரும்பி அளிக்கப்பட வேண்டிய நிலையில் அரசின் முக்கிய ஆவணங்கள் அவரின் அலுவலகத்தில் இருந்து தற்போது கண்டறியப்பட்டதால் அதிபர் ஜோ பைடன் மேல் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒபாமா-பைடன் நிர்வாகம் தொடர்பான ஆவணங்கள் இருந்தது பற்றி வெள்ளை மாளிகை விசாரணைக்கு உத்தரவிட்டது. சில ஆவணங்கள் தவறுதலாக இடம் மாறி வைக்கப்பட்டு விட்டதாக அதிபரின் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அரசு ஆவணங்கள் விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.