2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நடக்க உள்ல முதலீட்டாளர்கள் மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் குறித்தும், பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இந்த பேச்சின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதலீடுகளை பெரிய அளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வழுவடைய செய்யவும் 2030ம் ஆண்டில் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தோம். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் உயர்மட்ட குழு, ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தற்போது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் வரும் 2024ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.