திமுக பேச்சாளர் மீது சென்னை கமிஷனரிடம் கவர்னர் மாளிகை புகார்!

திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசினார். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் மறைந்த நிலையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்பழகன் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் வாரியாக அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக பேச்சாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று பேசி வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அவதூறாகவும், கொச்சையாகவும் பேசினார். சட்டசபையில் தமிழக அரசு அச்சடித்து வழங்கிய உரையை ஆளுநர் ஆர்என் ரவி விட்டுவிட்டு படித்ததை கூறி அவர் கடும் சொற்களால் விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

ஆளுநர் ரவி உரை நிகழ்த்தியபோது பேப்பரில் எழுதி கொடுத்தபடி படித்திருந்தால் அவரது காலில் பூப்போட்டு அனுப்பி இருப்போம். ஆனால் தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதி கொடுத்த எங்கள் முப்பாட்டன் அபம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் ஆளுநரை செருப்பால் அடிப்பேன் என சொல்லும் உரிமை எனக்கு இருக்கா? இல்லையா. அவரது பெயரை சொல்ல முடியாது என்றால் காஷ்மீர் போகட்டும். நாங்களே தீவிரவாதிகளை அனுப்புகிறோம். சுட்டு கொல்லட்டும்.

உலகத்தில் ஒரே தலைவர் கருணாநிதி தான். அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து பாதியில் வந்தார். அவர் தான் தற்போது பாஜக தலைவராக தமிழ்நாட்டுக்கு உள்ளார். பிரான்சில் தயாரித்த வாட்சை இந்தியாவில் கையில் கட்டி இருந்தால் அது தேசபக்தியா. ஆளுநர் ஆர்என் ரவி பற்றி காது கூசும் வார்த்தைகளை கூறி பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ‛‛ஆளுநர் மாளிகை அளித்த புகார் குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.