அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்ஜிஆர். கட்சி எல்லைகள் கடந்து அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியவர். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த காலத்திலேயே குழந்தைகளுக்கு சத்துருண்டை கொடுத்தவர். மாணவர்களுக்கு படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். சிறந்த ஆட்சியாளராக இருந்தவர். எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர். அந்த நன்றியுணர்வோடு இன்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைகொள்கிறேன்’ என்றார்.
பின்னர், ‘அதிமுக துண்டு துண்டாக இருக்கிறது, ஆளுநராக உங்கள் கருத்து என்ன?’ என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த தமிழிசை, ‘ஆளுநராக இதற்கு பதில் சொல்ல முடியாது, கட்சித் தலைவராக இருந்தால்தான் பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் நல்ல கனவோடு கட்சி நடத்தி வந்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவது சிறப்பாக இருக்கும் என்பது தமிழகத்தில் ஒருவராக எனது தனிப்பட்ட கருத்து’ என்றார்.
எம்ஜிஆர் தேசியத் தலைவரா? திராவிடத் தலைவரா? என கேள்விக்கு, ‘எம்ஜிஆர் தேசியம் போற்றிய திராவிடத் தலைவர்’ என்று பதில் அளித்தார்.