மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், போலீசார் பார்வையாளர்கள் மீது திடீரென தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அவனியாபுரம், திருச்சி சூரியூர், மதுரை பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பதால் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகளும், 300 வீரர்களும் களம் கண்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை சட்டம் ஒழுங்கு பிரச்சனையில்லாமல் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் டிஐஜி பொன்னி, மதுரை எஸ்பி சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன், தேனி எஸ்.பி டோங்ரே பிரவின் உமேஷ் ஆகியோர் தலைமையில் 1,500 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சீருடையிலும், சாதாரண உடைகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை பார்வையாளர்கள் இந்த கேலரியில் ஷிஃப்ட் முறையில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாநில மற்றும் சுற்றுலா வந்த பார்வையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேலரில் ஏறும்போது முண்டியடுத்துக் கொண்டு ஏறியதால் சிலர் தடுமாறி விழுந்தனர். இந்நிலையில், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் லேசான காயமடைந்தனர்.