நான் சர்வாதிகாரி அல்ல. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை அதிமுக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் தனித்தனி அணிகளாக இயங்கி வருகின்றனர். பொதுக்குழு, செயற்குழு, கட்சி நிர்வாகிகள் ஆதரவு 95 சதவீதத்திற்கும் அதிகமாக தனக்கே இருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடினார். எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என கூறிவரும் சசிகலா சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவில் பிரிந்து நிற்கும் அணிகளை இணைப்பதற்காக விரைவில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தொண்டர்கள் அனைவருக்கும் ஓபிஎஸ் இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், “நான் சர்வாதிகாரி இல்லை. கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது” என்று தெரிவித்தார்.