விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை திடீரென நேற்று இரவு சந்தித்தார்.
மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார். இந்த நிலையில்தான் நேற்று இரவு மதுரையில் அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். தொண்டர்கள் படை சூழ, ஏகோபித்த கரகோஷங்களுடன் உதயநிதி ஸ்டாலின் அழகிரியை சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின் – அழகிரி இடையே பெரிதாக பேச்சுவார்த்தைகள் இல்லை, நேரடியாக இவர்கள் சந்தித்துக்கொள்வது இல்லை. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியுடன் இந்த சந்திப்பை நடத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பின் முதல்முறையாக இப்படி அழகிரியை போய் நேரில் பார்க்கிறார். அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கு தயா அழகிரி வந்திருந்த நிலையில் அழகிரியை உதயநிதி பார்க்க முடியவில்லை. இதனால் இன்று மரியாதை நிமித்தமாகவே அழகிரியை உதயநிதி பார்த்ததாக கூறப்படுகிறது. விழா நாட்களுக்கு இவர்கள் போனில் மாறி மாறி வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த முறை நேரடியாகவே வாழ்த்து சொல்லிவிடலாம் என்றுதான் உதயநிதி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் அழகிரியை நேற்று பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் அப்படியே காலில் விழுந்தார். அழகிரியின் மனைவி காந்தி அழகிரி உதயநிதியை அருகில் அழைத்து அவரின் நெற்றியில் முத்தம் கொடுத்து வீட்டிற்குள் வரவேற்றார். அமைச்சராக முதல்முறை உதயநிதி வீட்டிற்கு வருவதால் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. குடும்ப அளவில் இந்த சந்திப்பு இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை அரசியல் வட்டாரத்திலும் இந்த சந்திப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி வீட்டிற்கு சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கு பேசினர். அதன்பின் வீட்டில் இருந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நாளை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க இருக்கிறேன். பெரியப்பா அழகிரியை சந்தித்து ஆசிபெற்றேன். பெரியப்பாவும் என்னை வாழ்த்தினார்” என்றார்.
தொடர்ந்து மு.க அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அழகிரி கூறியதாவது:-
எனது தம்பி மகன் என்ற முறையில் அமைச்சரான பிறகு என்னை பார்க்க வந்தார். பெரியம்மாவிடமும் பெரியப்பாவான என்னிடமும் ஆசிர்வாதம் வாங்க வந்தார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறுவனாக இருக்கும் போது நெல்லையில் உள்ள எங்களது வீட்டிற்கு அடிக்கடி வந்திருக்கிறார். எனது தம்பி மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் ஆகி இருக்கிறார். மகன் உதயநிதி, அமைச்சர் ஆகி இருக்கிறார். அதனை விட பெரிய மகிழ்ச்சி இருக்கிறதா?.” என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் கூடிய விரைவில் உங்களை (திமுகவில்) எதிர்பார்க்கலாமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மு.க அழகிரி, “அது அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார்.