ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 2 பாதுகாப்பு படை போலீசார் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் மகாஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (வயது 29). விண்வெளி ஆராய்ச்சி மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார். நேற்று பணியில் இருந்த அவர் இரவு 7.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு பேசினார். பின்னர் அவரிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை பிரிவினர் சிந்தாமணி பணியில் இருந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மரத்தில் சிந்தாமணி தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிந்தாமணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விகாசிங் (வயது 30). இவர் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். விண்வெளி ஆராய்ச்சி மைய வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேற்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வேலை செய்து கொண்டு இருந்தார். இன்று அதிகாலை பணி முடியும் நேரத்தில் விகாசிங் தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து நெற்றி பொட்டில் வைத்து சுட்டார். இதில் குண்டு பாய்ந்து தலையின் பின்பக்கம் வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து விகாசிங் பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி சுமை காரணமாக 2 பாதுகாப்பு படை போலீசார் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.