பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கையை சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் காளை தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அவனியாபுரம், திருச்சி சூரியூர், மதுரை பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நேற்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஏராளமான பொதுமக்கள், பார்வையாளர்கள் ஆண்டுதோறும் வருகை தருவார்கள் என்பதால் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் அதிகமான மாடு பிடி வீரர்களும் களம் கண்டனர். ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 100 காளைகள் வீதம் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 மாடு பிடி வீரர்கள், 24 மாடுகளின் உரிமையாளர்கள், 14 பார்வையாளர்கள், 2 காவலர்கள் என 53 பேர் காயமடைந்தனர்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்கக்காசு, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, பீரோ, சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன. காலை முதல் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 823 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் 26 காளைகளை அடக்கி சிவகங்கையைச் சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து 20 காளைகளை அடக்கிய ஏனாதியை சேர்ந்த அஜய் இரண்டாவது இடமும் 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் மூன்றாவது இடமும் பிடித்தனர். இதையடுத்து முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த அஜய்க்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அந்தக் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதே காளை தான் கடந்த ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வாகி கார் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.