இந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா தீவானது ‘ரிங் ஆஃப் பஃயர்’ எனும் பகுதிக்கு மேலே அமைந்திருப்பதால் இந்நாடு அடிக்கடி நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது. நிலத்திற்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுக்கள் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் பகுதிதான் ‘ரிங் ஆஃப் பஃயர்’ என அழைக்கப்படுகிறது. இந்த மோதல் காரணமாக தொடர் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவை ஏற்படும். அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் 6.0 அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பதறியடித்த மக்கள் உயரமான இடங்களில் சென்று தஞ்சமடைந்தனர். சாலைகளில் விரிசல்கள் விட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்போது சுலவேசியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் உருவாகியுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று மீட்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணியில் களமிறங்கியுள்ளனர். அதேபோல இந்தோனேசியா கடற்கரை பகுதிகள் மற்றும் தீவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியா தீவுகளில் எரிமலைகள் பல இருக்கின்றன. இந்த எரிமலைகள் நிலநடுக்கம் காரணமாக வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது