ஆளுநர் ஆர்.என்.ரவி “மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, திறமைகளை மேம்படுத்தி சாதனைகளை படைக்கவேண்டும்” என்றார்.
மாணவர்கள் தேர்வினை அச்சம் இன்றி எதிர்கொள்ளும் வகையிலும் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் ” Exam Warriors ” என்ற புத்தகத்தை பிரதமர் மோடி எழுதியுள்ளார். மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில் இந்த புத்தகம் தமிழ் உள்பட 11 மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. இந்த புத்தகத்தை தேசிய புத்தக அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் தமிழ் பதிப்பை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். இந்த புத்தகத்தின் முதல் பிரதியை சென்னை ஐஐடி இயக்குனர் காமக்கோடி பெற்றுக்கொண்டார். 2-வது பிரதியை சென்னை கேந்திரிய வித்யாலய சங்காதன் அமைப்பின் துணை கமிஷனர் ருக்மிணி பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, பள்ளி குழந்தைகள் தேர்வுக்கு எப்படி பயமின்றி தயார் ஆகலாம் என்பது குறித்த காணொளியும் ஒளிபரப்பட்டது. இதையடுத்து, ‘ Exam Warriors ” புத்தகத்தின் தமிழ் பதிப்பு புத்தகத்தை, பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-
நமது நாட்டின் விலைமதிப்பு மிக்க சொத்துக்களாகவும் எதிர்காலமாகவும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தேர்வினை எதிர்கொண்டு தடைகளை தாண்டி வெற்றி பெற இந்த ‘Exam Warriors’ புத்தகம் பயனுள்ள மற்றும் எளிய உதவி குறிப்புகளின் தொகுப்பாகும். இந்த புத்தகம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதிப்புமிக்க பொருளாக இருக்கிறது. இது வாழ்வதற்கும், சாதிப்பதற்கும் போராடும் வாழ்க்கை அனுபவத்துடன் வேரூன்றியுள்ளது. சாதாரண பின்னணியில் வளர்ந்து சாதிப்பதற்கும் போராட்டத்துடன் கூடிய ஆழமான வாழ்க்கை அனுபவங்களையும் இளைஞர்கள் மீது அக்கறையும் கொண்ட பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த புத்தகம் இதுவாகும். வாழ்க்கை பயணத்தின் நீண்ட நெடிய வழிகாட்டியாக உள்ள இந்த புத்தகத்தை இளைஞர்களும் மாணவர்களும், படிக்க வேண்டும். இந்த புத்தகத்தில் உள்ளவற்றை செயல்படுத்தி, தேர்வு பயத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
அதுமட்டும் இன்றி சவால்களை எதிர்கொண்டு, தனிப்பட்ட முறையிலும், சமூகம் மற்றும் நாட்டுக்காகவும் என ஒட்டுமொத்தமாக ஆதாயத்தை ஈட்டித்தரவேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, திறமைகளை மேம்படுத்தி சாதனைகளை படைக்க வேண்டும். நமது நாடு அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்கும், 2047-ம் ஆண்டில் இந்தியா உலக நாடுகளின் தலைவராகுவதற்கும் மாணவர்கள், இளைஞர்களின் துடிப்பான பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும். மாணவர்கள் எதிர்கொள்ளும் திறனை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் உள்ளவர்கள் ஆலோசகராக செயல்பட்டு, திறமையான மற்றும் பொறுப்பான குடிமக்களாக அவர்களை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.