பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் இருந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியமைத்த பெருமை பிரதமா் நரேந்திர மோடியைச் சாரும் என பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட சமூக-பொருளாதார தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீா்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர பட்னவிஸ் முன்மொழிந்தாா். நிறைவேற்றப்பட்ட சமூக-பொருளாதார தீா்மானம் குறித்து மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறியதாவது:-
அரசியல் மற்றும் நிா்வாகத்தில் தன்னிறைவை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் தேவையைப் பூா்த்தி செய்துள்ளது என சமூக-பொருளாதார தீா்மானம் சுட்டிக்காட்டுகிறது.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவதற்கான தேதியைக் கேட்டு பாஜகவிடம் எதிா்க்கட்சிகள் எள்ளி நகையாடின. ஆனால், இப்போது கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அனைவரையும் உள்ளடக்கிய, சுயசாா்புடைய இந்தியப் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது உறுதியற்ற வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் சாா்ந்துள்ள பலவீனமான ஐந்து வளா்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருந்தது. இந்தியாவின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம் நிறைவுபெறும் வேளையில், பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளால் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. இது குறித்து இந்தத் தீா்மானத்தில் பாராட்டப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள், அனைவருக்கும் வீடு, பெருந்தொற்றின் போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி உள்ளிட்டவை இந்தத் தீா்மானத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உலகின் மொத்த ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 2.6 சதவீதம் என்பதிலிருந்து 3.5 சதவீதமாக உயா்ந்துள்ளது. மேலும், எண்ம (டிஜிட்டல்) பணப்பரிமாற்றத்துக்கான சூழலும் பிரதமா் மோடியின் ஆட்சியின்கீழ் அதிகரித்து வருகிறது. உலகில் நடைபெறும் எண்ம பணப்பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது உள்ளிட்ட அம்சங்கள் இத்தீா்மானத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.
இந்நிலையில் திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு பாஜக தலைவர்களை பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். இந்த ஆண்டு ஜனவரியில் படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடையில் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. பாடலில் படுகவர்ச்சியுடன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. காவி நிறத்திலான பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் வெளியிடப்பட்டன.
இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது. அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் நடிகர் ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார். பதான் சர்ச்சை ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி பிகினி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியது என்று அரசியல்வாதிகள் மற்றும் பல மதத் தலைவர்கள் பேசிய சர்ச்சையை பேச்சுக்களை ஒவ்வொரு வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் வெளியிட்டன. படத்திற்கு பெரும் புறக்கணிப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் படத்தை திரையிடக்கூடாது என மிரட்டல் வந்ததால் அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது, திரைப்படங்கள் குறித்து தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் மோடி பாஜக தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு தழுவிய தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது நமக்குத் தெரியும். சில அரசியல்வாதிகளின் திரைப்பட அறிக்கைகளால் மத்திய அமைச்சர்களின் கடின உழைப்பு வீணாவதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை கருத்துக்கள் செய்தி சேனல்களில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர் கூறி உள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.