விமானத்தின் அவசர வழிக் கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை: அண்ணாமலை!

விமானத்தின் அவசர வழிக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த டிச.10ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அவசரகால கதவு திறக்கப்பட்டதன் காரணமாக, அவசரகால கதவு மற்றும் விமானத்தின் காற்றழுத்தம் மீண்டும் சரிபார்க்கப்பட்டு பின்னர் விமான புறப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என்றும், அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடக காங்கிரஸ்-ன் சிவக்குமார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் விமானத்தின் அவசர வழிக் கதவை திறந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரத்தில் அவசரகால கதவு திறக்கப்பட்டது உண்மைதான் என உறுதிபடுத்திய இண்டிகோ விமான நிறுவனம், கதவை திறந்தவரின் பெயரை வெளியிடவில்லை. பின்னர் இந்த விவகாரம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு மாதத்திற்கு பின்னர் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இண்டிகோ விமானத்தின் அவசர வழிக்கதவு திறக்கப்பட்ட விவகாரம் பற்றி விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து ஜோதிராதித்திய சிந்தியா கூறுகையில், விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டதாக கூறினார். இதன் மூலம் அவசர வழிக் கதவை திறந்தது தேஜஸ்வி சூர்யா என்பது உறுதியானது.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அவசர வழிக் கதவி திறக்கப்பட்டது தொடர்பாக புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். கர்நாடகாவின் சிக்மகளூருவில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், விமானத்தின் அவசர வழிக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை. அவர் தனது கைகளை அவசர வழிக் கதவில் வைத்திருந்தார். அப்போது அவசர வழிக் கதவு சரியாக மூடப்படாமல் இருந்தது. இதனை விமான பணியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அது அவரின் கடமை. இதுதொடர்பான விளக்கத்தையும் தேஜஸ்வி சூர்யா விமான நிறுவனத்திற்கு அளித்துள்ளார். அதேபோல் மன்னிப்பு கேட்கவில்லை. விமானம் தாமதமானதற்காக பயணிகளிடம் தான் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்துள்ளார்.