விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணிஞ்சம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வந்தார். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக பட்டாசு ஆலையில் பணியாற்றிய 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக வெடிவிபத்தில் படுகாயமடைந்த மாரீஸ்வரன், கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோருக்கு 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்து காரணமாக ஆலையின் 8 அறைகள் வெடித்து தரைமட்டமாகியுள்ளன. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் 2 வாகனங்களில் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சிவகாசி அருகே தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஆலையில் இருந்த இரு அறைகளும் தரைமட்டமாகியுள்ளன. ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தின் இரு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விருதுநகர், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி(60) குருசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ், ஆசீர்வாதம் என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.