அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லையா?: சு.வெங்கடேசன் கேள்வி!

அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்ற முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படி வருகிறார் என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பதே சரியானது எனப் பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகை பொங்கல் விருந்து அழைப்பிதழிலும் தமிழக ஆளுநர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு திமுக, சிபிஎம், சிபிஐ,விசிக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அந்த காலத்தில் தமிழ்நாடு என்பதே இல்லாததால்தான் காசியுடன் தமிழ் மக்களுக்கு உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். வரலாற்று சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் பேசியதாகவும், தனது பேச்சை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல் பொருள் கொள்வது தவறானது என்றும் ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கையை படித்து பார்த்ததில், ஏற்கனவே இருக்கும் பிரச்சினையை வேறு வகையில் மீண்டும் வலியுறுத்துகிறாரோ என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் என்று சொன்னதற்கான காரணத்தை விளக்கி இருக்கிறார். அதில், அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்று ஒரு கருத்தை சொல்லுகிறார். இந்த முடிவுக்கு அவர் எங்கிருந்து வருகிறார் என்ற கேள்வி இருக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தமிழ்நாடு இருக்கிறது என்பதை, வரலாறு காலம் முழுவதும் நமக்கு எழுதப்பட்ட ஆதாரங்கள் இருக்கிறது. இதை ஏன் அவர் மறுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதனை மறுப்பதன் மூலம் தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தி வந்ததைதான் விளக்க அறிக்கையிலும் வேறு விதத்தில் வலியுறுத்தி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு – காசிக்கும் இடையிலான உறவை சொல்லுகிற போது, நாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று ஆளுநர் சொல்லுகிறார். ஆளுநர் பேசியது மட்டுமல்ல, பொங்கல் விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் இல்லை. அதுமட்டுமல்லாமல், திருவள்ளுவர் ஆண்டு என்பது தமிழ்நாடு அரசு 1970களில் இருந்து கடைபிடிக்கும் முறை. அந்த தொடர் ஆண்டு முறையையே, கைவிட்டு ஒரு அழைப்பிதழை ஆளுநர் மாளிகை தயாரிக்கிறது.

தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு என அனைத்தையும் கலங்கப்படுத்துகிற, விவாதத்திற்குட்படுத்துகிற, நிராகரிக்கிற அரசியல் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தான் ஆளுநர் பேசி வருவதும், எழுதி வருவதும். விளக்க அறிக்கையில் ஆளுநர் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறுகிறார். உண்மை அதுவல்ல, தவறுதலான கருத்தோட்டத்தில் இருந்தே அவர் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.