நட்பு நாடுகள், உக்ரைனுக்கு தற்போது தேவைப்படும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள், குறிப்பாக பீரங்கிகளை விரைவாக அனுப்ப வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் தலைநகர் கீவ் அருகே நேற்று ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்ட்ரஸ்கி (42), இணையமைச்சர் யெவ் ஹென் யெனின், உள்துரை அமைச்சக செயலாளர் யூரி லுப்கோவிச் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். நர்சரி பள்ளிக்கு மிக அருகே இந்த ஹெலிகாப்டர் விழுந்து தீப்பற்றியதில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியது. ஓராண்டாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சரின் இந்த மரணம், உக்ரைன் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்ட்ரஸ்கி, அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த ஓராண்டாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனின் பல பகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு, மீள் கட்டமைப்புகளுக்கான பணிகளை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தார். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியவுடன், சேதங்களை பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் இவரது மரணம், உக்ரைனுக்கு பெரும் பேரிடியாக அமைந்து விட்டது. ரஷ்ய ராணுவம் மின் நிலையங்களை குறி வைத்து ராக்கெட் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மின்சப்ளை இல்லாததால் வீடுகள், கட்டிடங்களில் விளக்குகள் எரிவதில்லை. விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், பெரும்பனி படர்ந்திருந்தது. அதனால் ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளுக்கு விண்வெளிப்பாதை கண்களுக்கு தெரியவில்லை என்பதே இந்த விபத்துக்கு காரணம் என்று உக்ரைன் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகளின் தாக்குதலால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற அச்சமும் உக்ரைன் அரசுக்கும், மக்களுக்கும் உள்ளது. ரஷ்ய படைகளின் தாக்குதல்தான் இந்த விபத்துக்கு காரணம் என உக்ரைன் அரசு இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் இந்த விபத்து நடந்த பின்னர், 2 மணி நேரம் கழித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டி லைவ்வாக ஒளிபரப்பானது. அதில் அவர் கூறியதாவது:-
போர் நடைபெறும் காலங்களில் விபத்துகள் நடப்பதில்லை. உள்துறை அமைச்சர் உயிரிழந்ததற்கு காரணமான இந்த விபத்தும் போரின் விளைவுதான். உலகின் சுதந்திர நாடுகள் (போர் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள்) சிந்திக்க பயன்படுத்தும் நேரத்தை, பயங்கரவாத அரசுகள் கொல்ல பயன்படுத்துகின்றன. இதை உணர்ந்து ஜெர்மனி உள்ளிட்ட நட்பு நாடுகள், உக்ரைனுக்கு தற்போது தேவைப்படும் ஆயுதங்களை விரைவாக அனுப்ப வேண்டும். குறிப்பாக தரையில் இருந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தும் சக்தி வாய்ந்த பீரங்கிகள், தற்போது உக்ரைனுக்கு உடனடியாக தேவைப்படுகின்றன. ரஷ்ய ராணுவம் அடுத்த பெரிய தாக்குதலை துவக்குவதற்கு முன்னதாக இந்த ஆயுதங்கள், எங்களுக்கு வந்து சேர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபரின் இந்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ‘நாளை நடைபெறும் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தில், இது குறித்து விவாதித்து, உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த, நவீன ஆயுதங்களை அனுப்ப தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்’ என்று நேட்டோ அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதி ஜென்ஸ் ஸ்டால்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.