லடாக்கில் நிலை கொண்டுள்ள படையினரிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கல்வானில் சீன ராணுவ வீரர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால் நான்கு ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீனா உறுதி செய்தது. அனால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய நாளிதழில் வெளியிட்ட செய்தியின்படி கல்வானில் நான்கு சீன வீரர்கள் அல்ல, சீனாவுக்கு அதை விட பல மடங்கு இழப்பாக குறைந்தது 38 வீரர்கள் வரை இறந்ததாகக் கூறியிருந்தது. இப்படியாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
கல்வான் மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையேயும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் எட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே மறுபடியும் மோதல் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் கடந்த டிசம்பர் 9ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங், கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் அவர்களின் போர் தயார்நிலையை இன்று ஆய்வு செய்தார். சின்ஜியாங் இராணுவக் கட்டளையின் கீழ் உள்ள குன்ஜெராப்பில் உள்ள எல்லைப் பாதுகாப்பு நிலைமை குறித்து, இங்குள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) தலைமையகத்தில் இருந்து ஷி ஜின்பிங் துருப்புக்களிடம் உரையாற்றினார்.