புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை குறித்து பரிசீலனை செய்யப்படும்: கிரண் ரிஜிஜூ

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று வழக்கறிஞர் சேம்பர் கட்டட பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில், சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், மாவட்ட கீழமை நீதிமன்றங்களில், நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க, 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏழை மக்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சியில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொள்ள வேண்டும். நீதித்துறையில் பெண் வழக்கறிஞர்கள் பெருமளவு வரவேண்டும். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான அலுவலகம் மிகவும் அவசியம். வழக்கறிஞர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் மத்திய அரசு முனைப்போடு செயல்படுவகிறது. புதுச்சேரியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை நிறுவ வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி டி.ராஜா, முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.