பிபிசி ஆவணப்படம்: மோடிக்கு ஆதரவாக முழங்கிய ரிஷி சுனக்!

குஜராத் கலவரத்தோடு பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி உள்ளதாக கூறப்படும் பிபிசியின் ஆவணப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட எம்பி இம்ரான் உசைன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரதமர் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து முழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002ல் பாஜக ஆட்சி நடந்தது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அங்கு முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் திடீரென்று குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் குஜராத்தின் பல இடங்களில் கோரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப்படங்களை தயாரித்துள்ளது. கடந்த 17ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் வெளியான இந்த ஆவண படம் பல்வேறு வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. பிரிட்டன் வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலரும் இந்த ஆவண படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆவணப்படம் மூலம் பிபிசி, இந்திய மக்கள் 130 கோடி பேரின் உணர்வுகளை பெருமளவில் காயப்படுத்திவிட்டது என்று கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆவணப்படம் சில தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பில் அந்த ஆவண படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‛‛இந்தியாவுக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பாரபட்சம், காலனியாதிக்க மனப்பான்மை வெளிப்படுகிறது. இது கண்ணியமானது இல்லை” என சாடியிருந்தார்.

இந்நிலையில் தான் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் குறித்து பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட எம்பி இம்ரான் உசைன் இந்த கேள்வியை எழுப்பினார். இதற்கு ரிஷி சுனக், ‛‛குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் மரியாதைக்குரிய ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்றார். இதன்மூலம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக ரிஷி சுனக் பேசியுள்ளார்.