கடமையை செய்யும் ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர்: தமிழிசை

ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதற்கும் முரண்படாமல் கடமையை மட்டும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிககள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றன. டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரையிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மநிலங்களில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் எழாமல் இல்லை. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் டெல்லி, கேரளா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர்கள் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தனர். இது நாடு முழுவதும் கவனம் பெற்றது.

இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் மட்டும் ஆளுநருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன். தெலுங்கானா அரசு நெறிமுறைகளை ஏன் மீறுகிறது என்று கேளுங்கள். எதற்கும் முரண்பாடு இன்றி கடமையை செய்து வருகிறேன். சில மசோதாக்கள் என்னிடம் நிலுவையில் இருக்கின்றன. நான் அவற்றை மதிப்பீடு செய்து ஆய்வு செய்து வருகிறேன். ஆனால் அரசாங்கம் நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. குடியரசு தின விழாவை நடத்துவது தொடர்பாக மாநில அரசிடம் இருது இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அரசியல் சாசன பதவிக்கும் ஆளுநர் நாற்காலிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆளுநருக்கு ஏன் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தெலுங்கானா அரசு ஏன் நெறிமுறைகளின் படி செயல்படுவதில்லை என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நான் மீண்டும் மீண்டும் வைக்கிறேன். இந்த கேள்விக்கு பதில் அளித்தால் மற்ற அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளிப்பேன். ஆளுநர் தனது வரம்புகளை மீறவில்லை. ஆளுநருக்கு எதிராக முதல்வர்கள் கருத்து கூறுகின்றனர். நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். எப்படி செயல்பட வேண்டும் என எனக்கு சிலர் சொல்ல தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை தீவிரமாக எடுத்துள்ள சந்திர சேகர் ராவ் மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்தச் சூழலில், ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோதல் போக்கு உள்ளது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உரிய மரியாதையை மாநில அரசு வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆளுநர் தரப்பிலிருந்து பல மாதங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.